Wednesday 11 February 2009

கண்ணீர் அஞ்சலி - திரு. அம்பலவாணர் ஐயாத்துரை( This is for my uncle)

சிறகுகள் அடைக்கப்பட்ட சிட்டுக்குருவியாக எம் சொந்தமண்ணிலே வாழ்ந்தாலும்
நீ கட்டிய கூட்டினில் உன் ஜோடிக்குருவியுடன் உன் வாழ்க்கை இனிதே நகர்ந்தது...
பெற்றெடுத்தாய் ஐந்து முத்துக்களை...
உமக்கென ஐவர், ஐவரில் மூவர் உன் பால் மற்றவர் பெண்பால்...
மூவரில் இருவர் மட்டும் இன்று உன்பால் மற்றவர் அப்பால்...
காலங்களும் ஓடின... யுத்தங்களும் ஓடின நீயும் ஓடினாய் நாடோடி என
ஆனால்... உனைவிட்டு உன் நோய்கள் மட்டும் ஓடவில்லை...
உள்ளிருந்து அது குடைய பதட்டமோ உனை வதைக்க
நீ சிந்திய முத்துக்கள் இரண்டு கடல் தாண்டி வாழ்ந்திருக்க
தமிழீழ மண்ணிலே தலை சாய்க்கவே நான் வந்திடுவேன் என துணைவியிடம் வாக்களிக்க...
வாக்குமாற மாட்டாயென நம்பி உனை அனுப்ப
இன்று... நம்பிக்கை துரோகம் செய்ய எங்கனம் மனம் உகந்தாய்...
அன்று... கடல் தாண்டி ஆகாயமார்க்கமாய் உடலில் உயிர்தாங்கி எம்வழி வந்தாய்...
இன்று... கடல் தாண்டி ஆகாயமார்க்கமாய் உடலில் உயிர்விட்டு பறந்திட்டாய்...

லண்டன் மண்ணில் உன் வாழ்க்கை

நடையினில் நடுக்கமும் கண்களில் ஏக்கமும் தாங்கியபடி நீ வந்தாய்...
உறவுகள் கண்டாய் உல்லாசமாய் இருந்தாய்...
நாட்களும் ஓடின மாதங்களும் இரண்டு ஆகின...

மனைவி மக்களை எண்ணி உள்நெஞ்சில் நீ புலம்ப...
இரத்த அழுத்தம் உன்னுள்ளே அதிகரிக்க...
நாடி வழி குருதி சீறிட்டுப்பாய்ந்திட...
சிரசை வந்து சேர்ந்தது... மதியைத்தாக்கிச்சென்றது...
நொடிகளும் ஓடின நாட்களும் ஆகின

நாடிவழியே... குருதி பெருக்கெடுக்க தொடங்கின...
கண்வழியே அருகி கண்ணீரும் முட்டின...
கால்வழி கைவழி நரம்புகள் மரத்தன...
உன்வழி உறவுகள் கூக்குரல் எழுப்பின...

“அப்பா பாருங்கோ... அய்யோ என்னை பாருங்கோ...
பப்பா பாருங்கோ… பிள்ள என்னை பாருங்கோ...
அத்தார் பாருங்கோ... தம்பி என்னை பாருங்கோ...
அண்ண பாருங்கோ... கண்திறந்து என்னை பாருங்கோ...
குஞ்சையா பாருங்கோ... நிமிர்ந்து என்னை பாருங்கோ...
மாமா பாருங்கோ… ஒருக்கா என்னை பாருங்கோ...
அத்தமாமா பாருங்கோ... மூன்று பேரையும் பாருங்கோ…
அம்மப்பா பாருங்கோ… எங்களை கொஞ்சம் பாருங்கோ...
அப்பப்பா பாருங்கோ… தம்பி முருகன் அழுகிறான் பாருங்கோ…”

லண்டன் வந்தாய்... எம்மை பார்க்க என எண்ணி இருந்தோம்
ஆனால் மருத்துவமனை பார்க்க கங்கணம் கட்டி ஏன் வந்தாய்...

எதைக்கேட்டாலும் ஆறுமாதம் நிற்பேன் என்றாய்...
காலனவன் காத்திருக்கும் அறிகுறி அறியாயோ...
காலனிற்கு விண்ணப்பம் இட நீ நினைக்கலயோ...

படுக்கையில் நீ இருக்க வார்த்தைகளோ புதைந்திருக்க
கண்களில் ஏக்கத்துடன் நீ பார்த்த பார்வை வழி
வார்த்தைகள் பாதை மாறி உன் கண்வழியே வெளியேற
வார்த்தைகள் முட்டி இதையத்தை உதைத்திடவே
இதயமோ முட்டி உன் கண்களில் அலை பாய...
அலைகள் வழிகின்றது, அணைகட்ட அசைவில்லா உன் கைகள் என்செய்யும்...

தலை கோத கைதூக்க, கை அசையாதேயிருக்க
தலை தாழ்ந்து உனை மணந்த மகராசியையா நினைச்சிங்க...
பேரன் பேத்தி ஓடேக்க, கால் தவறி விழப்பாக்க
ஓடிப்போய் தாங்க... அசையா உங்க காலை என்ன சொல்லி திட்டினிங்க...
மூச்சுத்திணறேக்க என்ன அய்யா நினைச்சிங்க
முத்தமிட்டு வழி அனுப்ப சொந்தம் நாங்க உண்டெனவா நினைச்சிங்க...

காலப்பரீட்சை எழுதி விட்டு நீ காத்திருக்க...
காலனவன் தேடி உன்னிடம் வந்திருக்க
யுத்த களத்தில் நீ இறங்க
காலனவன் உனை வென்றுவிட்டான்... நீ உனை தோற்றுவிட்டாய்...

உறவுகள் கூச்சலிட... ஒப்பாரிகள் எதிரொலிக்க...
அய்யா உங்க காதுக்கு ஒரு ஒலியும் எட்டலயோ...
மகராசி அங்கிருக்கா அவவுக்கு நாங்க என்ன சொல்ல
சொல்லாம போயிட்டீங்களே... என்ன செய்ய நாங்க இங்க...


உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்